மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.5,900 கோடி செலவிடப்பட்டுள்ளது
By DIN | Published On : 23rd June 2019 12:35 AM | Last Updated : 23rd June 2019 12:35 AM | அ+அ அ- |

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை ரூ. 5,900 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நிருபர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது:
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 5,900 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மட்டும் ரூ. 2,200 கோடிக்கு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, தொகை பெறப்பட்டுள்ளது.
சித்த மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் பெறப்படவில்லை. பெரும் சவாலான ஒன்றாக உள்ளது.
நிபா வைரஸ் தாக்குதல் தமிழ்நாட்டுக்கு வந்துவிடாமல் இருக்க கேரள எல்லைகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிகாரில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் தமிழகத்துக்கு பரவ வாய்ப்பில்லை. ஏனெனில், அது தொற்றுநோய் அல்ல. இருப்பினும், அரசு மருத்துவமனைகளில் மூளைக்காய்ச்சலுக்கு அனைத்து மருத்துவமும் தயார் நிலையில் உள்ளது என்றார்.