ஆட்சியர் அலுவலகத்தில் 4 பேர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 25th June 2019 08:43 AM | Last Updated : 25th June 2019 08:43 AM | அ+அ அ- |

ஊரை விட்டு விலக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம் ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ். கூலித் தொழிலாளி. இவரது குடும்பத்தினரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் துரைராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், துரைராஜ் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டது.
கடந்த 4 மாதங்களாக இந்த உத்தரவின் மீது எவ்வித நடவடிக்கையும் போலீஸார் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குறிப்பிட்ட சிலர், துரைராஜின் வீட்டுக்கு வந்து மிரட்டிச் சென்றதாக தெரிகிறது.
இதனால் விரக்தியடைந்த துரைராஜ், அவரது மனைவி சின்னப்பொண்ணு, மகன்கள் பாரதி, ஜெயபாரதி ஆகியோர், தங்களின் உறவினர்கள் 6 பேருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனர்.
திடீரென துரைராஜ் குடும்பத்தினர் தாங்கள்கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து திருக்கோகர்ணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உரிய அறிவுரைகளை வழங்கி ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வருவாய் அலுவலர் விசாரணை: துரைராஜ் குடும்பத்தினருடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி பேச்சுவார்த்தை நடத்தி மனுவைப் பெற்றுக் கொண்டார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் காவல்துறையின் சோதனையையும் மீறி எப்படி மண்ணெண்ணெய் எடுத்து வந்தனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.