மாரடைப்பால் உயிரிழப்போரின்  எண்ணிக்கை ஆண்டுக்கு 34% அதிகரிப்பு

மாரடைப்பு என்ற இதய இயக்க நிறுத்தம் காரணமாக இறப்போரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 34 சதவிகிதம்

மாரடைப்பு என்ற இதய இயக்க நிறுத்தம் காரணமாக இறப்போரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 34 சதவிகிதம் உயர்ந்து வருவதாக டாக்டர் நரேந்திரநாத் ஜெனா தெரிவித்தார்.
புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் செவிலியர் கல்லூரியில் அவசர சிகிச்சை மற்றும் தீவிர பராமரிப்பு தொடர்பான 7ஆவது மாநில மாநாடு மற்றும் தென் இந்தியாவில் முதல் முறையாக செவிலியர் கல்லூரியில் தானியங்கி வெளிப்புற இதயமுடுக்கி இயந்திரம் நிறுவுதல் மற்றும் செயல்முறை விளக்க மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரபல மருத்துவர் நரேந்திரநாத் ஜெனா இம்மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசியது:
மாரடைப்பு மற்றும் இதய இயக்க நிறுத்தம் காரணமாக இறக்கும் மக்களின் விகிதம் ஒவ்வோர் ஆண்டும் 34 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. சிலர் தேவையான சிகிச்சை அளிக்கப்படாமலும், சிலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் இறந்து விடுகின்றனர். உயிர் காக்கும் முதலுதவி மற்றும் தானியங்கி வெளிப்புற இதய முடுக்கி மூலம் பல உயிர்களைக் காப்பாற்றலாம். 
இதய இயக்க நிறுத்தம் என்பது எதிர்பாராத விதமாக திடீரென்று இதயத் துடிப்பு நின்று விடுவதாகும்.  இவ்வாறு நடக்கும் பொழுது மூளை மற்றும் இதர முக்கியமான உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். இதனைச் சில மணித்துளிகளுக்குள் கவனிக்காவிடில் இறப்பு நேரிடும். 
தானியங்கி வெளிப்புற இதய முடுக்கி என்பது இதயத் துடிப்பை ஆராய்தல் மற்றும் மின் அதிர்ச்சியூட்டும் சிறிய கணினிமயமாக்கப்பட்ட ஒரு சாதனமாகும். மின்முனை திட்டுகளை நோயாளியின் மார்பகத்தில் வைக்கும்போது இக்கருவி நோயாளியின் இதயத் துடிப்பை ஆராயும்.
உயிர் காக்கும் முதலுதவியின் மூலம் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே உயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் இக்கருவியைப் பயன்படுத்தினால் 75 சதவிகித உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றார் நரேந்திரநாத் ஜெனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com