மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்
By DIN | Published On : 04th March 2019 08:49 AM | Last Updated : 04th March 2019 08:49 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகிலுள்ள ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் சுவாமி ஊர்வலம் வரும் மரத்தேர் சிதலமடைந்ததால் கடந்த பல ஆண்டுகளாக தேரோட்டம் இல்லாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து கோயிலுக்கு புதிய தேர் செய்யத் தீர்மானிக்கப்பட்டு பொதுமக்கள், உபயதாரர்கள் மூலம் சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பில் புதிய தேர் உருவாக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து புதிய தேர் வெள்ளோட்டத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்று புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இதில் ஆதனக்கோட்டை, குப்பையன்பட்டி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, சோழகம்பட்டி, கணபதிபுரம், கல்லுக்காரன்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.