சுடச்சுட

  


  பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தின்போது இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து சனிக்கிழமை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். 
  பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தினமும் கல்லூரி வாயிலில் போராட்டம் நடத்தினர். 
  இதில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலர் அரவிந்தசாமி உள்ளிட்ட 5 நிர்வாகிகளை போலீஸார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி, அதிரடிப்படை வாகனத்தில் ஏற்றினர். இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தின் போது, போலீஸார் மாணவர் சங்கத் தலைவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்திருப்பதாக இந்திய மாணவர் சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் வெள்ளிக்கிழமையே அறிவிக்கப்பட்டது. 
  இதன்படி, சனிக்கிழமை காலை இச்சங்கத்தினர் பழைய பேருந்து நிலையம் அருகே கூடினர். மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி. மாரியப்பன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ஆறு பிரகாஷ், வாலிபர் சங்க மாவட்டச் செயலர் துரை நாராயணன், திருச்சி மாவட்டச் செயலர் லெனின், மாதர் சங்க மாவட்டச் செயலர் டி. சலோமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன் உள்ளிட்ட அக்கட்சியினரும் வந்திருந்தனர். காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். முக்கிய நபர்களை கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
  இதைத் தொடர்ந்து சங்கங்களின் முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தைக்குச் சென்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai