மக்களவைத் தேர்தல்: "மாவட்டத்தில் இதுவரை ரூ. 18.95 லட்சம் பறிமுதல்'

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை ரூ.18,95,800 ரொக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை ரூ.18,95,800 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பி. உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு அஞ்சல் அட்டையை புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டு அவர் கூறியது: 
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே வாக்களிப்பது அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டுள்ளது.     
இந்த வாக்காளர் விழிப்புணர்வு அஞ்சல் அட்டையில் வாக்காளர் உதவி எண் 1950 மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1800 425 8541 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணும் அச்சிடப்பட்டுள்ளது.
இவ்வாறான 40,000 அஞ்சல் அட்டைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த தேர்தலின்போது குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் அஞ்சல் அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக  வழங்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்புக் குழு, 2 வீடியோ கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. 
 புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மூலம் இதுவரை ரூ.18,95,800 பணம் மற்றும் 100 எண்ணிக்கையில் மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக மாவட்டத்தில் இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் உமாமகேஸ்வரி.
நிகழ்ச்சில் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சுவாதி மதுரிமா, மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, தேர்தல் வட்டாட்சியர்  திருமலை ஆகியோர் பங்கேற்றனர்.
அறந்தாங்கியில்...
புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி அருகே வாகனச் சோதனையில் ரூ. 1.66 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெகதாபட்டினம்  அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வேளாண் உதவிஅலுவலர் ஆதிசாமி, சிறப்பு காவல் உதவி  ஆய்வாளர் செல்வராஜ், காவலர்கள் ஜான்சன், அஜ்மீர், வாகன ஓட்டுநர் சரவணன் உள்ளிட்டோர்  பாலக்குடி என்ற இடத்தில் வாகனச் சோதனை நடத்தினர்.
அப்போது  மார்த்தாண்டத்திலிருந்து  காரைக்கால் நோக்கிச்  சென்று கொண்டிருந்த  மீன்லோடு ஏற்றும் வண்டியில் உரிய ஆவணங்கள்  இல்லாமல் இருந்த ரூ. 1 லட்சத்து 66 ஆயிரத்து 200 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  வாகனத்தையும் பணத்தையும் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா வசம் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com