Enable Javscript for better performance
"6 மாத சிகிச்சைக்குப் பின்னர் காசநோய் குணமாகும்'- Dinamani

சுடச்சுட

    

    காச நோயால் பாதிக்கபட்டவர்கள் 6 மாதம் தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ளுவதன் மூலம் முழுவதும் குணமடையலாம் என்றார் தலைமை மருத்துவரும், காசநோய் பிரிவு துணை இயக்குநருமான மு. பெரியசாமி.
    ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
    காசநோய் பரம்பரை நோயல்ல. சர்க்கரை நோய், எய்ட்ஸ் ,கேன்சர் நோயாளிகளையும், மது, போதை பழக்கம் உள்ளவர்களையும் இந்நோய் பாதிக்கிறது.
     உலகத்தில் இந்நோயால் 9.2 மில்லியன் மக்களும், இந்தியாவில் 2.2 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
    மாலை நேரக் காய்ச்சல், 2 மாதங்களுக்கு மேலான இருமல், எடை குறைதல் ,பசியின்மை, சளியில் ரத்தம் வருதல், மூச்சு விடுதலில் சிரமம் ஆகியவை இதன் அறிகுறிகள். ஆகவே இதன் பாதிப்பு உள்ளவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து 2 மணிநேரத்தில் முடிவு தெரிந்து கொள்ளலாம்.  மேலும், நோயால் பாதிக்கப்பட்டோர் 6 மாதம் தொடர்ந்து மருந்து உட்கொள்வதன் மூலம் முழுவதும் குணமடையலாம். 
    காசநோய் பாதிக்கப்பட்டோருக்கு மாதம் ரூ. 500 என சிகிச்சை காலம் முடியும் வரை வழங்கப்படுகிறது. மருந்துகளை அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம்  ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை சுமார் 11, 988 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக காசநோயை ஒழிக்க திட்டம் வகுத்துச் செயல்படுத்தி  வருகின்றன என்றார் அவர்.
    மருத்துவர்கள் ரேகா, பிரதீபா, மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai