முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
மது ஆலையை மூடக் கோரி போராட்டம்: 270 பேர் கைது
By DIN | Published On : 15th May 2019 08:37 AM | Last Updated : 15th May 2019 08:37 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே மதுபான ஆலையை மூட வலியுறுத்தி தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் மகளிர் ஆயம் அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 270 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த கல்லாக்கோட்டை ஊராட்சியில் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்களின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மதுபான ஆலை அமைக்கப்பட்டு இயங்கிவருகிறது. இந்நிலையில் இந்த மதுபான ஆலையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட தமிழ் தேசிய பேரியக்கத்தின் மகளிர் ஆயம் அமைப்பின் தலைவி ம. லட்சுமிஅம்மாள் தலைமையில், தமிழகத்தின் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கல்லாக்கோட்டைக்கு வந்தனர்.
கடைவீதியில் தொடங்கிய பேரணியில் மதுக்கடைகளை மூடு , மது உற்பத்தியை நிறுத்து , மது விற்று மக்கள் வாழ்வை அழித்துவிட்டு, அதில் பணம் ஈட்டி இலவசங்களைத் தர வேண்டியதில்லை , அரசு மதுக்கடைகளை திறந்து மக்களை வதைக்கிறது, மதுக்கடையால் தமிழர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டாலும் , இதன் முழுச் சுமையையும் தாங்குவது பெண்கள்தான் எனக் கோஷங்கள் எழுப்பியவாறு மதுபான ஆலையை முற்றுகையிடச் சென்றனர். இவர்களை மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் த. ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் தடுத்துக் கைது செய்து கந்தர்வகோட்டை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் குழந்தைகளுடன் பெண்கள் உள்ளிட் 270 பேர் கைது செய்யப்பட்டனர்.