முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு சட்டவிரோதம்
By DIN | Published On : 15th May 2019 08:39 AM | Last Updated : 15th May 2019 08:39 AM | அ+அ அ- |

விடுதலைப்புலிகளுக்கான தடையை மத்திய அரசு மேலும் 5 ஆண்டு காலத்துக்கு நீட்டித்துள்ளது சட்ட விரோதம் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அதேபோன்று 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெல்வது உறுதி.
மே 23-க்குப் பிறகு மத்தியிலும் மாநிலத்திலும் அரசியல் மாற்றம் ஏற்பட உள்ளது.
விடுதலைப் புலிகளுக்கான தடையை மேலும் 5 ஆண்டு காலம் மத்திய அரசின் நீட்டித்துள்ளது அடிப்படை ஆதாரமற்றது, சட்டவிரோதமானது.
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடுதான் தூத்துக்குடியில் ஸ்டாலின் தங்கியுள்ள தனியார் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை.
நடிகர் கமல்ஹாசன் கோட்சே குறித்து தெரிவித்த கருத்து தவறானதல்ல. கோட்சேவைத் தெய்வமாகக் கொண்டாடுவோம் எனக் கூறியுள்ள சங்பரிவார் மீது பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப் போவதில்லை. திமுக தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக அவரிடம் எடுத்துக் கூறி விட்டது.
காங்கிரஸ் தலைமையிலான மாநிலக் கட்சிகள்தான் ஆட்சியமைக்கும் என்ற திமுக நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.7 தமிழர் விடுதலையில் தொடர்ந்து ஆளுநர் தவறு செய்து வருகிறார். சட்டவிரோதமாக அவர் செயல்படுகிறார் என்றார் வைகோ.