ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 1இல் போராட்டம்: விவசாயிகள் சங்கம் முடிவு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி பகுதிகளில் வரும் ஜூன் 1ஆம் தேதி தொடர் போராட்டங்களை நடத்த
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழு கூட்டத்துக்கு  சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ் . காளிமுத்து தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலர் எஸ்.சி. சோமையா நடைபெற்ற பணிகள் குறித்து விளக்கினார். சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் மு. மாதவன் மாநில நிர்வாகக் குழுக் கூட்ட முடிவுகளை விளக்கினார்.
கூட்டத்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மத்திய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. கஜா புயலுக்கு அறிவித்த நிவாரணம் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்கவில்லை . மாவட்ட நிர்வாகமும் வேளாண்மைத் துறையும் உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
அதேபோல புயலால் பாதிக்கப்பட்ட பலா, எலுமிச்சை, தேக்கு,  வாழை, கரும்பு மற்றும் இதர பயிர்களுக்கும் அரசு அறிவித்த நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். ஏரி குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மாவட்டத்தில் வறட்சியைப் போக்க நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாத்திட, மாநில அரசு உடனடியாக தைல மரக்  காடுகளை அகற்ற வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
புதுக்கோட்டை விவசாயிகளின் நீண்ட நாள் கனவு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் நீர் ஆதாரத்தை பாதுகாத்திடவும் காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com