மயக்கவியல் மருத்துவக் கருத்தரங்கு
By DIN | Published On : 20th May 2019 08:26 AM | Last Updated : 20th May 2019 08:26 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மயக்கவியல் மருத்துவச் சங்கத்தின் சார்பாக தொடர் மருத்துவக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு, சங்கத் தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் மனோகர் ஜோஸி, செயலர் நவீன் மல்கோத்ரா, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரம், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ம.சந்திரசேகரன், துணை இயக்குநர் பரணிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.
இக் கருத்தரங்கில் மகப்பேறு நேரத்தில் ஏற்படும் ரத்தக்கொதிப்பு காரணங்கள், அவற்றை தடுக்கும் முறைகள், அதற்கான மருத்துவ முறைகள், பல வகையான மயக்க மருந்து முறைகள், மயக்க மருத்துவத்தில் பயன்படுத்தும் மாறுபட்ட மருத்துவ முறைகள், இதயம் நின்ற பிறகு இயக்க வைக்கும் முறைகள், மஞ்சள் காமாலை மருத்துவ முறைகள், அல்ட்ரா சவுண்ட் முறையில் நரம்புகளைச் செயல் இழக்க வைக்கும் முறைகள், சர்க்கரை நோய்ப் பாதிப்பின் போது அறுவைச் சிகிச்சை முறைகள் போன்ற பலவகையான தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் 150 மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.