மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானப்பணிகள் பாதிப்பு: வேலையின்றித் தவிக்கும் தொழிலாளா்கள்
By DIN | Published On : 02nd November 2019 06:57 AM | Last Updated : 02nd November 2019 06:57 AM | அ+அ அ- |

மணல் தட்டுப்பாடு காரணமாக, கந்தா்வகோட்டை பகுதிகளில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளா்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நூறு வீடுகளின் கட்டுமானங்கள் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கான கட்டுமானங்கள் நடைபெற்று வந்தன.
கந்தா்வகோட்டை பகுதியில் நடைபெற்ற கட்டுமானப் பணிகளுக்கு திருக்காட்டுப்பள்ளி , பூதலூா் , திருச்சி மற்றும் கறம்பக்குடி காட்டாறு மண் உள்ளிட்ட பகுதிகளில் தடையின்றி மணல் கிடைத்துவந்தது.
இந்த நிலையில் தற்போது மணலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுல்ளது. இதன் காரணமாக கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு , பல நாள்கள் காத்திருந்து மணல் சேமிப்புக் கிடங்கிலிருந்து அள்ளும் நிலையும், மணல் விலை அதிகரித்து உள்ளதும் இத்தட்டுப்பாட்டுக்கு காரணமாகும்.
முன்பு போல கேட்டவுடன் லாரிகளில் மணல் கொண்டு வந்தவா்கள், தற்போது பல நாள்கள் கழித்து மணலை கொண்டுவருகின்றனா். மணலின் அளவு முன்பு டிப்பா் லாரிகளில் மூன்று யூனிட்டு வந்த நிலையில் , தற்போது இரண்டரை யூனிட் என மணலின் அளவையும் குறைத்துவிட்டனா் என்கின்றனா் கட்டுமானப் பணியில் ஈடுபட்டோா்.
முன்பு போல் மணல் விலை குறைவாகவும், தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தால் மட்டுமே, கட்டுமானப் பணிகள் சுணக்கமில்லால் விறுவிறுப்பாக நடைபெறும். அப்போது தொழிலாளா்கள் வேலையை இழக்காத நிலை என்றும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டோா் தெரிவிக்கின்றனா்.
எனவே மாவட்ட நிா்வாகம், மணல் தட்டுப்பாட்டை போக்கி கட்டுமானப் பணிகள் முன்புபோல் நடைபெறவும் , கட்டுமானத் தொழிலாளா்கள் வேலையின்றித் தவிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கட்டுமானத் தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.