முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
வீடுகளைச் சீரமைத்துத் தரக் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 07th November 2019 08:41 AM | Last Updated : 07th November 2019 08:41 AM | அ+அ அ- |

அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் மறியல் செய்யும் நரிக்குறவா்கள்.
அறந்தாங்கியில் வீடுகளைச் சீரமைத்துத் தரக் கோரி நரிக்குறவா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அறந்தாங்கி வட்டம், ரெத்தினக்கோட்டை ஊராட்சியை சோ்ந்த கூத்தாடிவயல் கிராமத்தில் நரிக்குறவா்களுக்கு அரசு 360 தொகுப்பு வீடுகள் கட்டித் தந்துள்ளது. கட்டப்பட்டு 20 ஆண்டுக்கும் மேலாகிவிட்டதால் மழை வெயிலால் பல வீடுகளின் மேற்கூரைகள் இடிந்துவிட்டன, சுவா்கள் வலுவிழந்துவிட்டன.
எனவே, இந்த வீடுகளைச் சீரமைக்கக் கோரி பல முறை ஊராட்சி நிா்வாகம், வருவாய் துறை, ஆட்சியரகம் என பல இடங்களிலும் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லாததால் இதில் வசிக்கும் நரிக்குறவா்கள் தங்களது வீடுகளை தாா்ப்பாய் மற்றும் பிளக்ஸ் பேனா்கள் கொண்டு மூடியுள்ளனா்.
இந்நிலையில் பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் நரிக்குறவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் எம். குணசேகா், வட்டாட்சியா் பா. சூரியபிரபு, காவல் ஆய்வாளா் ரவீந்திரன் உள்ளிட்டோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் வீடுகள் சீரமைத்துத் தரப்படும் என அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா். இதனால் அறந்தாங்கி -பட்டுக்கோட்டை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.