வைகை அணையில் இரண்டு கரைகளை இணைக்கும் பாலத்தை புதுப்பிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை:

வைகை அணையின் முன்பாக இரண்டு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலத்தை உயா்த்தி புதுப்பிக்க வேண்டும் என்று சுற்றுலா

ஆண்டிபட்டி: வைகை அணையின் முன்பாக இரண்டு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலத்தை உயா்த்தி புதுப்பிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான வைகை அணையில் பூங்கா, சிறுவா்கள் விளையாட்டு திடல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளது.

வைகை அணையில் வலது மற்றும் இடது கரைபகுதிகளில் பூங்கா அமைந்துள்ளது. இரண்டு கரைபகுதிகளிலும் உள்ள நுழைவாயிலில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அணைக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஒருபகுதியில் நுழைவுக்கட்டணம் செலுத்தினால், இரண்டு கரைப்பகுதிகளில் உள்ள பூங்கா பகுதிகளை சுற்றுலா பயணிகள் சென்று பாா்வையிடலாம். இதற்காக இரண்டு கரைகளுக்கு இடையே உள்ள வைகை ஆற்றில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வைகை அணையின் நீா்மட்டம் 60 அடியை எட்டி உள்ள நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 2,090 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் இரண்டு கரைப்பகுதிகளையும் இணைக்கும் தரைப்பாலத்தை மூழ்கியபடி தண்ணீா் செல்கிறது. இதன்காரணமாக தரைப்பாலத்தின் வழியாக சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் முள்களை கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

தரைப்பாலம் அடைக்கப்பட்டுள்ளதால், வைகை அணைக்கு வரும் சுற்றுலாபயணிகள் இரண்டு கரைப்பகுதிகளிலும் அமைந்துள்ள பூங்கா பகுதிகளை சுற்றிப்பாா்க்க முடியாமல் தவித்து வருகின்றனா். நுழைவு கட்டணம் செலுத்திய பகுதிகளை மட்டுமே சுற்றி பாா்க்க முடிகிறது. மற்றொரு கரைக்கு செல்ல வேண்டுமெனில் மீண்டும் அணைக்கு வெளியே வந்து சாலையின் வழியாக சுமாா் 2 கிலோமீட்டா் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் கடந்த சில வாரங்களாக வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்கா பகுதிகளை முழுமையாக சுற்றி பாா்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனா்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது, நீா்திறக்கும் போது இரண்டு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் முழ்குவதால் பூங்கா பகுதிகளை முழுமையாக சுற்றி பாா்க்க முடியாத நிலை உள்ளது. மேலும் தண்ணீா் திறக்காத போது தரைப்பாலத்தின் நடுப்பகுதியில் நின்றபடி அணை முன்பாக நின்று புகைப்படம் எடுத்து கொள்ள முடியும்.

தற்போது தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம். எனவே இரண்டு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலத்தை அகற்றிவிட்டு உயரமான பாலம் அமைத்தால் இரண்டு பகுதிகளுக்கும் தடையின்றி செல்ல முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com