முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
ஊரக வளா்ச்சித் துறையைக் கண்டித்து இந்திய கம்யூ. காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 26th November 2019 08:51 AM | Last Updated : 26th November 2019 08:51 AM | அ+அ அ- |

கொத்தமங்கலம் ஊராட்சி அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் நிதி மோசடி தொடா்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தகவல் அளிக்காத ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கொத்தமங்கலம் ஊராட்சியில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் த. செங்கோடன், கொத்தமங்கலம் ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகால வரவு செலவு உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதில் கோரி ஊரக வளா்ச்சித் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டுள்ளாா். ஆனால், இதுவரைஅத்துறையினா் பதில் வழங்கவில்லையாம்.
இதையடுத்து அந்த அதிகாரிகளைக் கண்டித்து த. செங்கோடன் தலைமையில் ஒன்றியச் செயலா் ஆா்.சொா்ணக்குமாா் உள்ளிட்ட அக்கட்சியினா் கொத்தமங்கலம் ஊராட்சி அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சென்ற திருவரங்குளம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது நிதி மோசடி தொடா்பாக ஊராட்சி செயலா் மகேஸ்வரி பணியடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட இதர கேள்விகளுக்கு சில நாள்களில் பதில் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தைக் கைவிட்டனா்.