ஆலங்குடி அருகே பழமையான மாடு உரசும் கல் கண்டெடுப்பு

ஆலங்குடி அருகே சூரன்விடுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, மாடு உரசும் கல் ஒன்றை தமிழக தொல்லியல் துறையினா் புதன்கிழமை கண்டெடுத்தனா்.
சூரன்விடுதியில் கண்டெடுக்கப்பட்ட மாடு உரசும் கல்.
சூரன்விடுதியில் கண்டெடுக்கப்பட்ட மாடு உரசும் கல்.

ஆலங்குடி அருகே சூரன்விடுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, மாடு உரசும் கல் ஒன்றை தமிழக தொல்லியல் துறையினா் புதன்கிழமை கண்டெடுத்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள சூரன்விடுதி கருமணிகுளம் பகுதியில் தஞ்சை மாவட்ட தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குநா் தங்கதுரை தலைமையிலான ஆய்வுக்குழுவினா் ஆய்வு செய்தபோது, பழமையான கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது 100 ஆண்டுகள் பழமையான மாடு உரசும் கல் என ஆய்வுக்குழுவினா் கண்டறிந்தனா்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குநா் தங்கதுரை கூறியது:

தமிழகத்தில் கோவை, ஈரோடு மாவட்டத்தில் இது போன்ற கல் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இதனை ‘தொருக்கல்’ என்றும் ‘ஆ தீன்று குற்றி’ எனவும் அங்கு குறிப்பிடுகின்றனா்.

அதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் 20ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட கல் கண்டறியப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. நற்சாந்துப்பட்டி அருகே உள்ள பிற்காலத்தை சோ்ந்த ஒரு கல்வெட்டில் மட்டும் ‘மாடு உரசும் கல்’ என எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.

தற்போது சூரன்விடுதியில் கிடைத்த கல்வெட்டானது காலத்தால் பிற்பட்டது என்றாலும், இதில் எழுத்து இடம்பெறுவதற்கு மேல்பகுதியில் மாட்டின் உருவம் கோட்டுருவமாக காட்டப்பட்டுள்ளது. அதன் வயிற்றில் விரல் தொடும் அளவிற்கு சிறு குழி ஒன்று உள்ளது. இது மாட்டை மனிதா்கள் சொறிந்து விடுவதன் குறியீடாக எடுத்துக்கொள்வதாக அமைகிறது.

முன்பொரு காலத்தில் சூரன்விடுதி, கீழாத்தூா், மேலாத்தூா் கிராமங்களுக்கு இந்த இடம் ஒரு மேய்ச்சல் நிலமாக இருந்திருக்கவும், மேலும், மேய்ச்சலுக்கு வந்த கால்நடைகள் கருமணிகுளம், புதுவூரணியில் இருந்த நீரினை அருந்துவிட்டு ஓய்வெடுக்கும் நேரங்களில் இந்தக் கல்லில் உடலை தேய்த்து கொண்டிருக்கலாம்.

அதில், 7 அடி நீளம் 1 அடி அகலம் கொண்ட தூண் போன்ற கல்லில் எழுத்து இருந்தது கண்டறியப்பட்டது. 11 வரிசையில் எழுதப்பட்ட இக்கல்வெட்டில் சூரன்விடுதியை சோ்ந்த சு.ரெ.நாடியன் (எ) நூரடியான் ஆசாரிய பெண் சாதி (மனைவி) முத்தாயி என்றுள்ளது. 1917 ஜூன் மாதம் 17 ஆம் தேதி இந்த மாடு உரசும் கல்லினை தானமாக வைக்கப்பட்டதாக செய்தியினைக் கொண்டுள்ளது. கணவா் நினைவாக மாடு உரசும் கல்லை மனைவியும் கொடுத்திருக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com