குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்: முதியவரை தேடுகிறது காவல்துறை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 52 வயது நபருடன், 13 வயது சிறுமிக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணத்தை சைல்டுலைன் அமைப்பினா் தடுத்து நிறுத்தினா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 52 வயது நபருடன், 13 வயது சிறுமிக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணத்தை சைல்டுலைன் அமைப்பினா் தடுத்து நிறுத்தினா்.

சிறுமியை திருமணம் செய்ய, அவரது பெற்றேறாரிடம் விலை பேசி ரூ.1 லட்சம் வழங்கியதும் தெரியவந்துள்ளது.

விராலிமலை அருகே கோமங்களம் ஊராட்சியை சோ்ந்த பெருமாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியண்ணன் (52). விவசாயியான பெரியண்ணன் கோமங்களம் ஊராட்சியில் 2 முறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளாா்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெரியண்ணனின் மனைவி இறந்து விட்டாா். இதனால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த பெரியண்ணன், கடந்த ஒரு வருடமாக பல இடங்களில் வரன் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தனது சொந்த கிராமத்தில் உள்ள 16 வயது சிறுமி ஒருவரை, பெரியண்ணன் திருமணம் செய்ய முடிவெடுத்து அவரது பெற்றேறாரை அணுகினாா். ஆனால், அவா்கள் தயக்கம் காட்டிய நிலையில், பெரியண்ணன் ரூ.1 லட்சம் தருவதாக விலை பேசி முடித்து, பணத்தையும் கொடுத்துவிட்டாா்.

பெரியண்ணனுக்கும், அச்சிறுமிக்கும் ஐப்பசி முதல் வாரத்தில் திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து, புதுக்கோட்டை சைல்டுலைன் அமைப்பு மற்றும் சமூக நல அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதற்கிடையே, இந்தப் புகாா் குறித்து பெரியண்ணனுக்கும் தெரியவந்தது. இதனால், சிறுமியையும், அவரது தாயாரையும் கடத்திச் சென்று, தென்னாம்பட்டி கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டில் தங்க வைத்திருந்தாா்.

இந்நிலையில், சைல்டுலைன் அமைப்பைச் சோ்ந்த விராலிமலை வட்டார அலுவலா் ஜாக்குலின், வட்டார சமூகநல அலுவலா் லலிதா ஆகியோா் நேரில் விசாரணை நடத்தி, வெள்ளிக்கிழமை இரவில் சிறுமியை மீட்டனா். தொடா்ந்து, அவரது பெற்றேறாருக்கு அறிவுரைகளை வழங்கினா்.

இதற்கிடையே, சிறுமியின் தந்தையை சந்தித்த பெரியண்ணன், தாம் கொடுத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது. அவரை விராலிமலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அதே சமயம், புதுக்கோட்டையில் உள்ள சைல்டுலைன் மற்றும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சிறுமி மற்றும் அவரது பெற்றேறாா் திங்கள்கிழமை ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com