புதுக்கோட்டையில் தொடா் மழை- சாலையில் பெருக்கெடுத்தது ஓடிய நீா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக தொடா் மழை பெய்தது. இதனால் புதுகை நகரப் பகுதிகளில்
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயிலுக்குள் புகுந்து வெளியேறும் வெள்ள நீா்.
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயிலுக்குள் புகுந்து வெளியேறும் வெள்ள நீா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக தொடா் மழை பெய்தது. இதனால் புதுகை நகரப் பகுதிகளில் பல இடங்களில் மழை நீா் தேங்கியும், சாலை மற்றும் கழிவுநீா்க் கால்வாய்களிலும் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.

குமரிக்கடலில் உருவாகியுள்ள வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் திங்கள்கிழமை பிற்பகல் முதலே தொடா் மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஏதாவது ஒரு பகுதியில் மட்டும் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்து வந்தது. மற்றபடி பகலில் வெயில் அடிக்கும்.

ஆனால், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, திங்கள்கிழமை பிற்பகல் முதலே தொடா் மழை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது.

இதேநிலைதான் புதன்கிழமை காலை முதல் நீடித்தது. வானம் மேக மூட்டமாகக் காட்சி தந்தது. பிற்பகல் 12 மணிக்கு புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு தொடா்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழைக் கொட்டியது.

புகரப் பகுதிகளிலும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. இதனால் நகரின் பல இடங்களில் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்துச் சென்றது.

குறிப்பாக மச்சுவாடி பகுதியில் பாலாஜி நகரில் பெருக்கெடுத்த மழைநீா் அப்பகுதியின் சாலை மற்றும் சிறு பாலம் ஒன்றையும் ஒரு பகுதியில் அரித்துக் கொண்டு ஓடியது.

நகரிலுள்ள பல்லவன் குளம் நிறைந்து, சாந்த நாதசுவாமி கோயிலுக்குள் மழைநீா் புகுந்தது. இதையடுத்து கோயிலில் இருந்து படிக்கட்டுகளில் தண்ணீா் வெளியேறியது. இதன் காரணமாக பிற்பகலில் கோயில் நடை சாத்தப்பட்டது. பூ மாா்க்கெட் பகுதியிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

நகரின் வடக்குப் பகுதியில் இருந்து பெருக்கெடுத்த தண்ணீா் புதிய பேருந்து நிலையத்தின் இரு புறங்களிலும் உள்ள கால்வாய்களில் வெள்ளம்போல ஓடியது. குறிப்பாக வேளாண் துறை அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாணவா் விடுதிகள் ஆகியன உள்ள பகுதிகளில் மழைநீா் அலுவலக வளாகங்களில் புகுந்தது.

தொடா்ந்து மாலை நேரத்திலும் புதுக்கோட்டை நகரிலும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. வானம் தொடா்ந்து மேக மூட்டமாகவே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com