கண்டியாநத்தம் கிராமத்தில் விவசாயக்குழு கூட்டம்
By DIN | Published on : 25th September 2019 12:00 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் நீடித்த மானாவாரி இயக்கத்தின் கீழ் விவசாயக்குழு கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, பொன்னமராவதி வேளாண்மை அலுவலர் கவிதா தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ப.முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பனை விதையின் பயன்கள் குறித்து விளக்கப்பட்டு பனை விதைகள் நட அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் கண்டியாநத்தம் பகுதியில் பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உதவி வேளாண்மை அலுவலர் மலர்விழி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரவிராஜன், விவசாய பொறுப்புக்குழு செயலர் சந்திரன், பொருளர் மோகன், கூட்டுறவு சங்க இயக்குனர் அழகு, முன்னாள் ஊராட்சித்துணைத்தலைவர் செல்லையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வம்பனில் இயற்கை பண்ணையம் பயிற்சி: ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இயற்கை பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு திங்கள்கிழமை பயிற்சி நடைபெற்றது.
மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் சார்பில் நடைபெற்ற பயிற்சிக்கு, நிலைய வேளாண்மை அலுவலர் ஆதிலெட்சுமி தலைமை வகித்தார். வம்பன் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் லதா, வேளாண்மை அலுவலர் லூர்துராயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியில், நிலைய வேளாண்மை அலுவலர் ஆதிலெட்சுமி பேசியது: வயல்களில் நுண்ணுயிரிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக உயிர் உரங்கள் மற்றும் திரவ உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மண்புழு உரம், பஞ்சகாவியத்தை பயன்படுத்தினால், நுண்ணுயிரிகளைப் பாதுகாக்கலாம். இயற்கை விவசாயத்தில் கூட்டுப்பண்ணையத்தின் முறைகளை பயன்படுத்தி படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்றார்.
இதில், வேளாண் உதவி அலுவலர்கள் பெரியசாமி, பிரபாகரன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.