கந்தர்வகோட்டை :தரமற்ற சாலையை கண்டித்து மறியல்

கந்தர்வகோட்டை அருகே தரமற்ற முறையில் சாலை போடப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். 


கந்தர்வகோட்டை அருகே தரமற்ற முறையில் சாலை போடப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். 
கந்தர்வகோட்டை ஒன்றியம், கல்லுப்பட்டி பிரிவு சாலையானது, திருச்சி - செங்கிப்பட்டி நெடுஞ்சாலையிலிருந்து பிரிவு சாலையாக செல்கிறது. இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்து வந்தது. 
இந்நிலையில், பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய தார்ச்சாலை சமீபத்தில் போடப்பட்டது. அப்போது இந்த தார்ச்சாலை தரமற்றதாக போடப்படுகிறது எனக் கூறி சாலை பணியினை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 
இத்தகைய சூழலில், தற்போது பெய்து வரும் மழைக்கு, புதிய சாலையில் தண்ணீர் தேங்கி, ஜல்லி கற்கள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறிவிட்டது.
இதனால், கல்லுப்பட்டி, விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர், செங்கிப்பட்டி - கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். 
அவர்களிடம் நெடுஞ்சாலைத் துறை உதவி திட்ட அலுவலர் செந்தில், கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நா. அரசமணி, காவல் ஆய்வாளர் சிங்காரவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது, பிரச்னை குறித்து, வரும் திங்கள்கிழமை கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com