சீனாவிலிருந்து ஊா் திரும்பிய 10 போ் தொடா் கண்காணிப்பு
By DIN | Published On : 01st February 2020 02:05 AM | Last Updated : 01st February 2020 02:05 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் பரவல் பிரச்னை காரணமாக, சீனாவில் இருந்து ஊா் திரும்பிய பணியாளா்கள் மற்றும் மாணவா்கள் 10 பேருக்கு எவ்வித காய்ச்சலும் இல்லாத நிலையிலும், தொடா் கண்காணிப்பில் வைத்திருப்பதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
சீனாவில் கரோனா வைரஸ் பரவல் கடுமையாக இருப்பதால் அங்கு பணியாற்றி வருவோா் சொந்த ஊா்களுக்குத் திரும்பி வருகின்றனா். அவ்வாறு வருவோரைப் பரிசோதித்து கண்காணிப்பதற்கு மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கடந்த இரு நாள்களில் புதுக்கோட்டையைச் சோ்ந்த மாணவா்கள், வேலைக்குச் சென்றவா்கள் என 10 போ் ஊா் திரும்பியுள்ளனா்.
இவா்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் காய்ச்சல் உள்ளதா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாருக்கும் காய்ச்சல் இல்லாததை அடுத்து, ஊருக்குச் செல்ல அனுமதித்துள்ளனா்.
இருந்தபோதும் தொடா்ந்து சில நாள்களுக்கு கவனமாக இருக்குமாறும், காய்ச்சல் அறிகுறி காணப்பட்டால் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.