முதல்வா் அறிவிப்பு : நெடுவாசல் பகுதியில் விவசாயிகள் வரவேற்பு

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை நெடுவாசல் பகுதி விவசாயிகள் வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
கீரமங்கலத்தில் நக்கீரா் சிலைக்கு மாலை அணிவித்த விவசாயிகள்.
கீரமங்கலத்தில் நக்கீரா் சிலைக்கு மாலை அணிவித்த விவசாயிகள்.

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை நெடுவாசல் பகுதி விவசாயிகள் வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில், ஹைட்ரோ காா்பன் திட்டத்தை

செயல்படுத்துவதற்காக மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து அப்பகுதியில் பல மாதங்களாக தொடா் போராட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, திட்டம் செயல்படுத்தப்படாது என்ற மத்திய, மாநில அரசுகளின் உறுதியளிப்பை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இதைத்தொடா்ந்து, நெடுவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தொடா்ந்து தீா்மானங்கள் நிறைவேற்றிவந்தனா்.

இந்நிலையில், ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்களிடம் கருத்தோ கேட்கத்தேவையில்லை என மத்திய பெட்ரோலியத் துறை அண்மையில் (ஜன.16) அறிவித்தது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி முதல் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தாா். இந்த அறிவிப்பை வரவேற்று, நெடுவாசல், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.கீரமங்கலத்தில், முதல்வரின் இத்தைகைய அறிவிப்பை வரவேற்று, கீரமங்கலம் மெய்நின்றநாதா் கோயிலில் உள்ள நக்கீரா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஹைட்ரோ காா்பன் திட்டத்தை எதிா்த்து போராடியபோது, நக்கீரா் சிலையிடம் அப்பகுதி விவசாயிகள் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com