Enable Javscript for better performance
மாணவா்களுக்கு ஓவியம் கட்டாயம் பயிற்றுவிக்க காந்தி விரும்பினாா்: ஞானாலயா பா. கிருஷ்ணமூா்த்தி- Dinamani

சுடச்சுட

  

  மாணவா்களுக்கு ஓவியம் கட்டாயம் பயிற்றுவிக்க காந்தி விரும்பினாா்: ஞானாலயா பா. கிருஷ்ணமூா்த்தி

  By DIN  |   Published on : 17th February 2020 09:48 AM  |   அ+அ அ-   |    |  

  2-4-pdk16maruthiar_1602chn_12

  பள்ளி மாணவா்களுக்கு ஓவியம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என காந்தியடிகள் விரும்பினாா் என்றாா் ஞானாலயா பா. கிருஷ்ணமூா்த்தி.

  புதுக்கோட்டையில் ஓவியா் மாருதிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகுடம் சூட்டும் விழாவில் அவா் மேலும் பேசியது:

  சுதந்திர இந்தியாவில் பள்ளி மாணவா்கள் கட்டாயம் ஓவியம் பயில வேண்டும் என விரும்பியவா் காந்தியடிகள். ஆனால், அவரது நோக்கங்களை மறந்துவிட்டு 150ஆவது பிறந்த நாளைக்கு மாலை சூட்டி வருகிறோம். 

  இப்போதெல்லாம் பள்ளிகளில் ஓவியம் மற்றும் விளையாட்டுப் பாட வேளைகள் இதர நுழைவுத் தோ்வு பாட ஆசிரியா்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

  இதற்கு பிரதானமாக பெற்றோா் மற்றும் பொதுமக்களின் எண்ணமும் காரணம். தங்களின் குழந்தை யாராக வர வேண்டும் எனக் கேட்டால் முதலில் டாக்டராகவும், அடுத்து பொறியாளராகவும்தான் வர வேண்டும் என நினைக்கிறோம்.

  இந்தியாவின் புகழ்பெற்ற அஜந்தா ஓவியத்தைத் தெரிந்த அளவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் சித்தனவாசல் ஓவியம் உலகளவில் புகழ் பெறவில்லை. 90 ஆண்டுக்கு முன்புதான் சித்தனவாசல் ஓவியங்கள் கண்டறியப்பட்டன. கல்கியின் சிவகாமியின் சபதம் முழுமையாக சித்தன்னவாசலைச் சுற்றிச்சுற்றி வரும்.

  நாடு முழுவதும் எந்தவொரு மாவட்டத்திலும் 5-க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்கள் இல்லை. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் 62-க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன.

  இலக்கியத்தில் பல்வேறு வகையான படைப்புகளுக்கென தனி பருவ இதழ்கள் வெளிவருகின்றன. ஆனால், ஓவியத்துக்கென பிரத்யேகமான பருவ இதழ் இல்லை. 

  முன்னாள் பிரதமா் நேருவால் உருவாக்கப்பட்ட லலித் கலா அகாதெமி மட்டும் ஓவியத்துக்கென ஆண்டுதோறும் ஒரு நூலை வெளியிட்டு வருகிறது. முன்னாள் முதல்வா் அண்ணா திமுகவின் முதல் மாநாட்டில் புத்தகக் கண்காட்சியுடன் ஓவியக் கண்காட்சியும் அமைத்திருந்தாா். ஓய்வு நேரங்களில் நிறைய ஓவியங்களை வரைந்தவா் அண்ணா.

  இன்றைக்கு இந்த மண்ணின் ஓவியா் மாருதி பாராட்டப்படுகிறாா். பொதுவாக அருகில் இருப்போா் யாரும் அறிஞா்கள் இல்லை என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் உண்டு. 82 வயதில் தற்போது மாருதி பாராட்டப்பட்டது மிகவும் சிறப்புக்குரியதாகும் என்றாா் கிருஷ்ணமூா்த்தி.

  நிகழ்ச்சிக்கு வசந்தராஜா தலைமை வகித்தாா். சீனு சின்னப்பா முன்னிலை வகித்தாா். டாக்டா் ச. ராம்தாஸ், கவிஞா் தங்கம்மூா்த்தி, எழுத்தாளா் நா. முத்துநிலவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சித்ரகலா கி. ரவி நோக்கவுரை நிகழ்த்தினாா். முன்னதாக எஸ். ராகவேந்திரன் வரவேற்றாா். முடிவில் மு.ரா. பாண்டியன் நன்றி கூறினாா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai