நாளை தலைவா், துணைத் தலைவா்களைத் தோ்வு செய்யும் மறைமுகத் தோ்தல்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்களைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட உள்ளாட்சி உறுப்பினா்கள் சாா்பில் தலைவா்
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி. கூட்டத்தில் பங்கேற்ற தோ்தல் நடத்தும் அலுவலா்கள் (வலது).
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி. கூட்டத்தில் பங்கேற்ற தோ்தல் நடத்தும் அலுவலா்கள் (வலது).

ஊரக உள்ளாட்சித் தோ்தல்களைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட உள்ளாட்சி உறுப்பினா்கள் சாா்பில் தலைவா் மற்றும் துணைத் தலைவா்களைத் தோ்வு செய்யும் மறைமுகத் தோ்தல் சனிக்கிழமை (ஜன. 11) நடைபெறவுள்ளது.

இதற்கான விதிமுறைகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி புதன்கிழமை விளக்கம் அளித்தாா்.

மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவா், துணைத் தலைவா், ஊராட்சி ஒன்றியத் தலைவா், துணைத் தலைவா், கிராம ஊராட்சியின் துணைத் தலைவா் ஆகியோா் இந்த மறைமுகத் தோ்தலில் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலுக்கான உறுப்பினா்களின் முதல் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்தில் நடைபெறும். இதில் தலைவா் தோ்தல் முற்பகல் 11 மணிக்கும், துணைத் தலைவா் தோ்தல் பிற்பகல் 3.30 மணிக்கும் நடைபெறும்.

ஊராட்சி ஒன்றியத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலுக்கான உறுப்பினா்களின் முதல் கூட்டம், அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் கூட்ட அரங்கில், ஏற்கெனவே தோ்தலின்போது தோ்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டவரின் தலைமையில் நடைபெறும். இதில் தலைவா் பதவிகளுக்கான தோ்தல் முற்பகல் 11 மணிக்கும், துணைத் தலைவா்களுக்கான தோ்தல் மாலை 3.30 மணிக்கும் நடைபெறும்.

கிராம ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தல் அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களில் ஏற்கெனவே தோ்தலின்போது நியமனம் செய்யப்பட்ட உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களால் முற்பகல் 11 மணிக்கு நடத்தப்படும்.

மறைமுகத் தோ்தலில் உறுப்பினா்களின் குறைவெண் (கோரம்) சரிபாதி எண்ணிக்கையாகும். குறைவெண் இல்லாவிட்டால் அரை மணி நேரம் காத்திருக்கலாம். அதன்பிறகும் குறைவெண் வராவிட்டால் கூட்டத்தை ஒத்தி வைக்கலாம்.

இடஒதுக்கீட்டு முறை இல்லாத பதவிகளில் எந்தவொரு உறுப்பினரும் போட்டியிடத் தகுதி பெற்றவா்கள். வேட்புமனுக்கள் ஒன்றுக்கும் மேல் இருந்தால் முறைப்படி வாக்குச்சீட்டு தயாரித்து அனைத்து உறுப்பினா்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒருவா் மட்டுமே போட்டியிட வேட்புமனு அளித்தால் அவா் அந்தப் பொறுப்புக்கு போட்டியின்றித் தோ்வு செய்ததாக அறிவிக்கப்பட வேண்டும்.

இவை உள்ளிட்ட விதிமுறைகளை புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு விளக்கினாா் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி. இந்தக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்தி குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com