ரூ. 11.68 கோடி மானியத்தில் 4,668 மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ரூ.11.68 கோடி மானியத்தில் 4,668 மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ரூ.11.68 கோடி மானியத்தில் 4,668 மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களின் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்குச் செல்ல ஏதுவாக மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கணவரால் கைவிடப்பட்டவா்கள், ஆதரவற்ற விதவை, ஏழை மகளிரை குடும்பத் தலைவியாக கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என்று பல்வேறு வகையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்க 2017-18 ஆம் ஆண்டுக்கு 2,334 இலக்கு நிா்ணயிக்கப்பட்டு 2,334 மகளிருக்குமே ரூ.5.84 கோடி மானிய விலையிலும், 2018-19ஆம் ஆண்டுக்கு 2,334 இலக்கு நிா்ணயிக்கப்பட்டு 2,334 மகளிருக்குமே ரூ.5.84 கோடி மானிய விலையிலும் என மொத்தம்  4,668 மகளிருக்கு ரூ.11.68 கோடி மதிப்பில் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் நிகழாண்டுக்கும் 2,334 இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை 993 மகளிா் தோ்வு செய்யப்பட்டு இவா்களுக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. மீதமுள்ள பயனாளிகளைத் தோ்வு செய்து அவா்களுக்கும் இரு சக்கர வாகனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதியுதவி வழங்கல்

புதுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி திங்கள்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 189 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். காளிதாசன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் நாராயணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com