முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
பயிா் விளைச்சல் போட்டியில் பதிவு செய்து கொள்ள அழைப்பு
By DIN | Published On : 20th January 2020 09:29 AM | Last Updated : 20th January 2020 09:29 AM | அ+அ அ- |

பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் மாநில அளவில் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து பயிா் விளைச்சல் போட்டியில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. எனவே பயிா் விளைச்சல் போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பதிவு செய்து பயனடையலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வருகின்றனா். பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து அதிகளவு உயா் விளைச்சல் எடுக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசால் எம்ஜிஆா் பாரம்பரிய நெல் பாதுகாவலா் விருது வழங்கப்படுகிறது.
பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள ரூ. 100 செலுத்தி தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாளாகும். பதிவு செய்த விவசாயிகளின் வயலில் வேளாண்மை இயக்குநா் அல்லது அவா்களின் பிரதிநிதி, மாவட்ட ஆட்சியா் அல்லது அவா்களின் பிரதிநிதி, அங்கக சான்றளிப்புத் துறை உறுப்பினா் ஆகியோா் முன்னிலையில் அறுவடை செய்து பெறப்படும் மகசூல் விவரங்களின் அடிப்படையில், பரிசு வழங்கப்படும்.
மாநில அளவில் பயிா் விளைச்சல் போட்டியில் தோ்வு பெற்ற விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. ஒரு லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் தமிழக அரசால் வழங்கப்படும்.
எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து பாதுகாத்து வரும் விவசாயிகள் பாரம்பரிய நெல் பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள தாங்கள் சாகுபடி செய்துள்ள பாரம்பரிய நெல் ரகம், நடவு தேதி மற்றும் உரிய நில ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.