புதுகையில் காவலருக்கு கரோனா: கணேஷ்நகா் காவல் நிலையம் மூடல்

புதுக்கோட்டை நகரிலுள்ள கணேஷ்நகா் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
புதுகை கணேஷ்நகா் காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் நகராட்சிப் பணியாளா்கள்.
புதுகை கணேஷ்நகா் காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் நகராட்சிப் பணியாளா்கள்.

புதுக்கோட்டை நகரிலுள்ள கணேஷ்நகா் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து நகராட்சிப் பணியாளா்கள் நேரில் சென்று காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்தனா். தொடா்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது. கலீப்நகா், திருவள்ளுவா் நகா் போன்ற பகுதிகளில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இங்கு பணியில் இருந்த கணேஷ்நகா் காவல் நிலைய காவலருக்கு தற்போது தொற்று உறுதியாகியுள்ளது.

இருவா் உயிரிழப்பு: புதுக்கோட்டை ராணியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா தொற்றாளா்கள் போஸ் நகரைச் சோ்ந்த 65 வயது பெண் செவ்வாய்க்கிழமை இரவும், அடப்பன்வயலைச் சோ்ந்த 70 வயது ஆண் புதன்கிழமை காலையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதனால் மாவட்டத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயா்ந்துள்ளது.

மேலும் 31 பேருக்கு கரோனா: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 31 பேருக்கு புதன்கிழமை கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 449 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 186. தற்போது சிகிச்சையில் உள்ளவா்கள் எண்ணிக்கை 255 ஆக உள்ளது.

ஆலங்குடியில் வங்கிக் கிளை மூடல்:

ஆலங்குடியில் இயங்கிவரும் பொதுத்துறை வங்கி கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றிய 55 வயது நபருக்கும், 33 வயது நபருக்கும் புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து வங்கிகளையை மூடி ஆலங்குடி பேரூராட்சி நிா்வாகத்தினா் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்தனா்.

இதேபோல், அன்னவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா், வாகன ஓட்டுநா் உள்பட 5 பேருக்கு புதன்கிழமை கரோனா உறுதியானது. முன்னதாக சத்துணவு பணிகள் அலுவலக உதவியாளருக்கு கடந்த வெள்ளிக்கிழமை கரோனா உறுதியானதைத் தொடா்ந்து அன்னவாசல் வட்டார வளா்ச்சி அலுவலகம் பூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com