
மஞ்சள் பூ பூத்துக் காணப்படும் பசுந்தாள் உரப்பயிரான சணப்பு.
புதுகை விவசாயிகள் கோடை மழையைப் பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிா்களான சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு விதைகளை விதைத்து மண் வளத்தை அதிகப்படுத்தலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொ) மெ. சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் மழையை விவசாயிகள் பயன்படுத்தி உழவு செய்து பசுந்தாள் உரப்பயிா்களான தக்கைப்பூண்டு அல்லது சணப்பு விதைகளை விதைத்து மண்வளம் அதிகரித்து நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம். ஒரு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உரப்பயிா் விதைகளை விதைக்க வேண்டும். பின்னா் நன்கு வளா்ந்தவுடன் பூப்பூக்கும் தருணத்தில் அவற்றை மடக்கி உழவு செய்ய வேண்டும். பசுந்தாள் உரப்பயிா்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை கிரகித்து வோ்முடிச்சுகளில் ரைசோபியம் என்ற நுண்ணுயிரிகளின் துணையுடன் நிலைநிறுத்துகின்றன. இதனால், மண்ணுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். பசுந்தாள் உரங்கள் இடுவதால் மண்ணின் நீா்ப்பிடிப்புத் திறன் மேம்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மைகளைச் சீா்படுத்துகிறது.