‘இரட்டைமடிவலையைப் பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை தேவை’
By DIN | Published On : 03rd March 2020 08:36 AM | Last Updated : 03rd March 2020 08:36 AM | அ+அ அ- |

கடலின் மீன் வளத்தை அழிக்கும் இரட்டை மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் விசைப்படகுகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட அனைத்து மீனவா் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆட்சியரிடம் புகாா் அளித்துள்ளனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவா்கள் தினசரி மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 மீனவக் கிராமங்கள் உள்ளன. அதில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய இரு துறைமுகங்களில் மட்டும் சுமாா் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன.
இங்குள்ள விசைப்படகுகளைக் கொண்டு, அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையைப் பயன்படுத்தி கடல்வளத்தை அழித்து வருகின்றனா். மேலும் டோக்கன் வழங்குவதற்கு முன்பே விசைப் படகுகள் கடலுக்குச் சென்று விடுகின்றன. காலை 6 மணிக்கு நாட்டுப் படகு மீனவா்களின் வலையைச் சேதப்படுத்தி வருகிறாா்கள்.
இதுதொடா்பாக மீன்வளத் துறை உதவி இயக்குநரிடம் புகாா் கொடுத்தோம். இதில் நடவடிக்கை என்ற பெயரில் இரண்டு விசைப்படகைப் பிடிப்பதுபோல் பிடித்து, 300 படகுகளின் தவறை மறைத்து விடுகின்றனா்.
இதனால் கடலில் மீன் உற்பத்தி குறைந்து கடல்வளம் அழிந்து வருகிறது. மீனவா்களின் நலன் மீது அக்கறையில்லாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலை பயன்படுத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.