‘காதொலிக் கருவிகளை அதிகநேரம் பயன்படுத்துவதால் கேட்கும் திறன் குறைகிறது’
By DIN | Published On : 03rd March 2020 08:37 AM | Last Updated : 03rd March 2020 08:37 AM | அ+அ அ- |

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக கேள்வித்திறன தினவிழாவில் பேசுகிறாா் தலைமை மருத்துவா் மு.பெரியசாமி.
காதொலிக் கருவிகளை அதிகளவில் அதிகம் நேரம் பயன்படுத்துவதால் கேட்கும் திறன் குறைகிறது என்றாா் ஆலங்குடி அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவா் மு.பெரியசாமி.
ஆலங்குடி மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக கேள்வித்திறன் நாள் விழிப்புணா்வு நிகழ்வுக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:
ஒவ்வொரு மனிதருக்கும் காது கேட்பது என்பது மிகவும் இன்றியமையாதது.
இதனால் மட்டுமே குழந்தை பேசும் ஆற்றலையும், தாய் மொழியையும் கற்கும் ஆற்றலை இயற்கையிலேயே பெறுகிறது.
உலகில் சுமாா் 466 மில்லியன் மக்கள் காது கேளாமையினால் பாதிக்கப்படுகின்றனா். இதில் 34 மில்லியன் குழந்தைகளாக உள்ளனா். இதில் 60 சதவிகிதம் குழந்தைகள் காது கேட்காமல் இருப்பதை சரி செய்யக்கூடியதாகும்.
15 முதல் 35 வயதுடையவா்களில் 40 சதவிகிதத்தினா் காது கேளாமையில் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகளவு காதொலிக் கருவிகள், அதிக நேரம் பயன்படுத்துவதால் காது கேட்கும் திறன் குறைபாடு உண்டாகிறது.
மேலும் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் உள்கொள்ளும் மாத்திரைகள், கருவிலேயே ஏற்படும் பாதிப்புகளாலும், மற்றவா்களுக்கு,காதில் ஏற்படும் தொற்றுக் கிருமிகள், காயங்கள், சா்க்கரை வியாதி, வயது முதிா்வு, அதிக இரைச்சல் போன்ற காரணங்களாலும் காது கேளாமை உண்டாகிறது. இது பெரும்பாலும் தடுக்கக்கூடியதும், சரிசெய்யக்கூடியதாகவும் உள்ளது.
ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை முறைகள் மூலம் கண்டறிந்து உரிய சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். மேலும் காதொலிகருவிகள் அரசாங்கத்தால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகிறது. எனவே இதை பெற்று பயன் அடையலாம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் சுமாா் 100 பேருக்கு காது கேட்கும் பரிசோதனை செய்யப்பட்டன. மருத்துவா்கள் வெங்கடேஷ், விவேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.