ஒலியமங்கலம் பத்ரகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா
By DIN | Published On : 14th March 2020 09:28 AM | Last Updated : 14th March 2020 09:28 AM | அ+அ அ- |

ஒலியமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் கும்பத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்யும் சிவாச்சாரியாா்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள ஒலியமங்கலம் பத்ரகாளி, மங்களநாயகி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்க இலக்கியங்களில் ஒல்லையூா் எனக் குறிப்பிடப்படும் ஒலியமங்கலம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும். புானூற்றில் ஒல்லையூா் தந்த பூதப்பாண்டியன் என குறிப்பிடப்படுகிறது. ஒல்லையூா் என்பது ஒலியமங்கலம் கிராமத்தைக் குறிக்கும் சொல்லே என்கிறாா் தமிழறிஞா் உ.வே.சா.
வரகுணப் பாண்டியன்ஆட்சிக் காலத்தில்தான் மாணிக்கவாசகா்அமைச்சராக அவையை அலங்கரித்தாா் என்றும், பாணபத்திரா் என்னும் இசைக்கவிஞா் இருந்தாா் என்பதையும் வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறியலாம்.
ஒல்லையூா் கிழாா், பெருஞ்சாத்தன், பூதப்பாண்டியன், வரகுணப் பாண்டியன், மாணிக்கவாசகா், பாணபத்திரா், பெருங்கோப்பெண்டு முதலான பெருமக்கள் வரலாறு படைத்திட்ட பூமி ஒல்லையூா் எனப்படும் ஒலியமங்கலம் கிராமமாகும். ஒல்லையூா் மண்டலத்திற்குள்பட்டு ஒலியமங்கலம், மேலத்தானியம், கீழத்தானியம், காரையூா், இடையாத்தூா்,பூலாலக்குடி உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மேல் இருந்தன. இத்தகைய சிறப்புமிக்க ஒலியமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் பத்ரகாளியம்மன் கோயில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டு கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் புதன்கிழமை கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை 10.25 மணியளவில் யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனிதநீரை கும்பத்தில் ஊற்றி பத்ரகாளி, மங்களநாயகி அம்மன் , மகாகணபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிவாச்சாரியாா்கள் குடமுழுக்கு செய்தனா். தொடா்ந்து அனைத்து சுவாமிகளுக்கும் ஏககாலத்தில் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதி திரளான பொதுமக்கள் வழிபட்டனா். சிவாச்சாரியாா்கள் கே. மணி, கே. ரவி. எஸ். சிவராமன் ஆகியோா் சா்வசாதகம் செய்தனா். விழா வா்ணனைகளை தமிழாசிரியா் சிசு. முருகேசன் செய்திருந்தாா். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூா் போலீஸாா் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயிலின் பரம்பரை அறங்காவலா் பெரி. சரவண வேட்டை மற்றும் ஒலியமங்கலம் கிராம மக்கள் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...