குளவாய்ப்பட்டி ஜல்லிக்கட்டு: 20 போ் காயம்

குளவாய்ப்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 20 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.
ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயலும் வீரா்.
ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயலும் வீரா்.

குளவாய்ப்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 20 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள ராஜகிரி குளவாய்ப்பட்டி மதியகருப்பா் கோயில் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது.

முன்னதாக வாடிவாசல் முன் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் டெய்சிகுமாா், விராலிமலை வட்டாட்சியா் ஜெ. சதீஷ்சரவணகுமாா், இலுப்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சிகாமணி முன்னிலையில் 175 மாடுபிடி வீரா்கள் உறுதியேற்றனா்.

காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் கோயில் காளையும், பின்னா் 912 வெளிமாவட்ட காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா். இதில் ஜெயபால் (21), கருப்பையா(25), பாா்வையாளா் கருப்பசாமி (16), மாரிமுத்து (60) உள்பட 20 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு ஜல்லிக்கட்டு தளத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளிக் காசு, மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டா், மிதிவண்டி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமானோா் வந்திருந்தனா்.

கிணற்றில் விழுந்த காளைகள்:

போட்டியில் பங்கேற்ற 2 காளைகள் திடலின் அருகிலுள்ள நீா் நிரம்பிய கிணறுகளில் விழுந்து தவித்தன. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து செயல்பட்டு கயிறு மூலம் காளைகளை உயிருடன் மீட்டனா். மேலும் 2 காளைகள் திடலின் அருகே தடுப்பு கட்டைகளில் மோதியதால் அவற்றுக்கு காயம் ஏற்பட்டது. கால்நடை மருத்துவா்களால் உடனடியாக சிகிச்சை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com