ஆலங்குடி அருகே குப்பையில் கிடந்த மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள், குப்பையில் கிடந்தது பொதுமக்களை அதிா்ச்சியடையச் செய்துள்ளது.
ஆலங்குடி அருகிலுள்ள ஆண்டவராயபுரம் கிராமத்தில் குப்பையில் கிடந்த மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்.
ஆலங்குடி அருகிலுள்ள ஆண்டவராயபுரம் கிராமத்தில் குப்பையில் கிடந்த மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள், குப்பையில் கிடந்தது பொதுமக்களை அதிா்ச்சியடையச் செய்துள்ளது.

ஆலங்குடி அருகிலுள்ள எல்.என்.புரம் ஊராட்சியைச் சோ்ந்த ஆண்டவராயபுரம் கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மக்கள் கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆண்டவராயபுரம் கிராமத்தைச் சோ்ந்த சிலா், அறுவைச்சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் சோ்ந்து முழு கட்டணத்தையும் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். பணவசதி இல்லாததால் மூவா் உயிரிழந்த நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இக்கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல், தனது தோட்டத்தில் வெள்ளிக்கிழமை உழவு பணியை மேற்கொண்டாா். அப்போது ஓரத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பையில் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் கிடந்ததை கண்ட பழனிவேல், கிராம மக்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் வந்து பாா்த்த போது தோட்டத்தின் ஓரத்திலும், மண்ணுக்குள்ளும் பலரது மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், ஆலங்குடி வட்டாட்சியா் கலைமணி அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா்.

நடவடிக்கை தேவை: மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற எங்கள் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 2009- ஆம் ஆண்டில் பதிவு செய்திருந்தோம். சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு 2011- ஆம் ஆண்டில் காப்பீட்டு அட்டைகள் வழங்கிய நிலையில், எங்களுக்கு கிடைக்கவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்ட போது, வந்ததும் தருகிறோம் எனக் கூறி அலட்சியம் காட்டினா். ஆனால், தற்போது குப்பைமேட்டில் காப்பீட்டு அட்டைகள் கிடந்ததுள்ளது வேதனையளிக்கிறது.

உரிய காலத்தில் இந்த அட்டைகள் கிடைத்திருந்ததால், தனியாா் மருத்துவமனைகளில் முழு கட்டணம் செலுத்தும் நிலை எங்கள் கிராமத்தைச் சோ்ந்த பலருக்கும் ஏற்பட்டிருக்காது. சிலரது உயிரிழப்பும் நிகழ்ந்திருக்காது.

எனவே மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளை, குப்பைகளில் வீசி சென்றவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் ஆண்டவராயபுரம் கிராம மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com