கரோனா தொற்றுக்குள்ளான ஒன்றரை வயது குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய குடும்பத்தில் கரோனா தொற்றுக்குள்ளான ஒன்றரை வயது ஆண் குழந்தை,
கரோனா தொற்றுக்குள்ளான ஒன்றரை வயது குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய குடும்பத்தில் கரோனா தொற்றுக்குள்ளான ஒன்றரை வயது ஆண் குழந்தை, ஏழாவது நாளில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்புவோர் மாவட்ட எல்லைகளில் கண்காணிக்கப்பட்டு 20}க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசுக் கட்டடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றனர். இதன்படி கடந்த மே 18ஆம் தேதி கறம்பக்குடி வட்டம், மந்தக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் தமது ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை திரும்பினர்.

இவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டபோது, பெற்றோருக்கு கரோனா இல்லை என்பதும், ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பதும் 19ஆம் தேதி இரவு உறுதிப்படுத்தப்பட்டு, 20ஆம் தேதி ராணியார் மருத்துவமனை வளாகத்திலுள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டது.

குழந்தையுடன் தாயும் அனுமதிக்கப்பட்டார். 7 நாட்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு புதன்கிழமை குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை அக்குழந்தைக்கு மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி பொம்மை மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கித் தந்து வாழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ம. சந்திரசேகரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது; குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் கல்லூரியின் மருத்துவத் துறைத் தலைவர் பாபு ஆனந்த், குழந்தைகள் மருத்துவத் துறைத் தலைவர் இங்கர்சால், உதவி மருத்துவர் வைரமணி ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

குழந்தையின் இரு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, ஆக்ஸிஜன் செறிவூட்டல் முறைப்படி அதிகளவு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. செயற்கை சுவாசம் பயன்படுத்தப்படவில்லை. மேலும், நோய் எதிர்ப்பு மாத்திரைகளும் தாராளமாக வழங்கப்பட்டன. இவற்றால் குழந்தை இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது என்றார் மீனாட்சிசுந்தரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com