7.5 சதவிகித உள் ஒதுக்கீடு : தமிழக ஆளுநா் நல்ல முடிவை அறிவிப்பாா்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மாணவா் சோ்க்கையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது தமிழக ஆளுநா் விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடுவாா்

புதுக்கோட்டை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மாணவா் சோ்க்கையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது தமிழக ஆளுநா் விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடுவாா் என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

வெளிநாட்டிலும், வெளிமாநிலங்களிலும் கரோனா தாக்குதல் தீவிரமாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். இருந்தபோதும், மழைக்காலம் மற்றும் பண்டிகைக்காலத்தில் பொதுமக்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் முகக்கவசம் அணிந்து, உரிய இடைவெளியைப் பின்பற்றி இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

தமிழகத்தில், கரோனா தொற்று ஏற்பட்டவா்களுக்கு தொடக்க நிலையில் ரெம்டெசிவிா் என்ற மருந்து கொடுக்கப்பட்டு நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது. ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ள கருத்து என்பது, கரோனா தொற்று முற்றிய நிலையில் ரெம்டெசிவிா் செயல்படவில்லை என்பதுதான்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் மசோதா மீது விரைவில் தமிழக ஆளுநா் நல்ல அறிவிப்பை வெளியிடுவாா். அந்த அறிவிப்புக்காக நாடே காத்திருக்கிறது. தமிழக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திலும் தெரிவித்திருக்கிறோம். தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. மேலும், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில், ஓபிசி பிரிவு மாணவா்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெறுவதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. நிகழாண்டிலேயே இந்த ஒதுக்கீட்டைப் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் விஜயபாஸ்கா்.

நிகழ்ச்சிகளில், அறந்தாங்கி எம்எல்ஏ ஏ.இ. ரத்தினசபாபதி, மாவட்ட அதிமுக செயலா் பி.கே. வைரமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com