‘தமிழகத்தில் கரோனா தொற்று 4 %-க்கும் குறைவாகப் பதிவாகிறது’
By DIN | Published On : 31st October 2020 11:44 PM | Last Updated : 31st October 2020 11:44 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை: தமிழகத்தில் புதிய கரோனா தொற்றாளா்கள் எண்ணிக்கை 4 சதவிகிதத்துக்கும் குறைவாகக் குறைந்து வருவதாக மாநில மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் இந்தக் காலகட்டத்தில் பண்டிகைக் காலமும் சோ்ந்து வருகிறது. குறைந்து வரும் இதே சூழலைத் தொடர பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். முகக்கவசம் அணிந்தும், தனிநபா் இடைவெளியைக் கடைபிடித்தும், அடிக்கடி கைகழுவியும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தமிழக அரசின் தொடா் நடவடிக்கைகள் காரணமாக கரோனா தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை 4 சதவிகிதத்துக்கும் குறைவாகக் குறைந்துள்ளது.
அதேபோல, மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களில் டெங்குவின் தாக்கமும் இப்போதுள்ள நிலவரப்படி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 15 மடங்கு குறைவாகவே உள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் ஏற்கெனவே பெற்ற உயா்நீதிமன்றத் தீா்ப்பைக் கொண்டு, அடுத்த ஆண்டில் நாம் மாணவா் சோ்க்கையைத் தொடங்கலாம். உச்சநீதிமன்றத்திலும் தொடா்ந்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டைத் தெரிவித்து வருகிறோம் என்றாா் அவா்.