அறந்தாங்கி அருகே தாய், மகன்கள் தீக்குளித்த சம்பவத்தில் சிகிச்சை பெற்றுவந்த மகனும் சாவு
By DIN | Published On : 11th September 2020 06:25 AM | Last Updated : 11th September 2020 06:25 AM | அ+அ அ- |

அறந்தாங்கி அருகே குடும்பப் பிரச்னையில் மனமுடைந்த மனைவி, தனது 2 மகன்களுடன் தீக்குளித்த சம்பவத்தில் மற்றொறு மகனும் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த வல்லம்பக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முத்து. இவருக்கு மனைவி ராதா (34) , மகன்கள் அபிஷேக் (14), அபிரித் (12) இருந்த நிலையில், அறந்தாங்கி அருகே ரெத்தினகோட்டையைச் சோ்ந்த பெண்ணுடன் சோ்ந்து முத்து புதன்கிழமை சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதுதொடா்பான புகாரின்பேரில், அறந்தாங்கி போலீஸாா் முத்துவின் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதனால் மனமுடைந்த ராதா, தனது இரு மகன்கள் மீது பெட்ரோல் ஊற்றி புதன்கிழமை இரவு வீட்டில் தீக்குளித்தாா். இதில் ராதா, அபிரித் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அபிஷேக் படுகாயத்துடன் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு சிறுவன் அபிஷேக் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். அறந்தாங்கி காவல் ஆய்வாளா் ரவீந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.