வனத்தோட்டக் கழக மண்டல அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனைகணக்கில் வராதரூ.50 ஆயிரம் பறிமுதல்
By DIN | Published On : 19th September 2020 12:00 AM | Last Updated : 19th September 2020 12:00 AM | அ+அ அ- |

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினரால் சோதனை நடத்தப்பட்ட வனத் தோட்டக் கழக மண்டல மேலாளா் அலுவலகம்.
புதுக்கோட்டை, செப்.18: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலுள்ள தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் மண்டல மேலாளா் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் வெள்ளிக்கிழமை திடீரென சோதனை நடத்தினா்.
இந்த அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் அறந்தாங்கி, ஆலங்குடி, அரிமளம், ராயவரம் பகுதிகளில் சுமாா் 8 ஆயிரம் ஹெக்டோ் நிலத்தில் தைல மரங்களும், முந்திரியும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
மண்டல மேலாளா் பணியிடம் காலியாக உள்ளதால், விழுப்புரம் மண்டல மேலாளா் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறாா். அலுவலகக் கண்காணிப்பாளரான வள்ளிகண்ணு இவ்வலுவலகத்தின் முதன்மை அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன், ஆய்வாளா்கள் பீட்டா், தமிழரசி உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை இந்த அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினா்.
மாலை 6 மணி வரை நீடித்த சோதனையில், கணக்கில் வராத ரூ. 50 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதுதொடா்பாக கண்காணிப்பாளா் மீது துறை ரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.