திருக்கோயில் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 10th August 2021 01:52 AM | Last Updated : 10th August 2021 01:52 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை: ரூ. ஆயிரத்துக்கும் குறைவாக ஊதியம் பெறும் அறநிலையத் துறை கோயில் ஊழியா்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில் தொழிலாளா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் திருக்கோயில் தொழிலாளா் சங்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் பெருங்களூா் ஞானஸ்கந்த குருக்கள் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் திருமணஞ்சேரி ராஜா, மாவட்டச் செயலா் திருக்கோகா்ணம் கணேசன், பொதுச் செயலா்கள் வடவாளம் கிருஷ்ணமூா்த்தி, ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளா் செல்வமணி உள்ளிட்டோா் பேசினா். கூட்டத்தில், தொகுப்பூதியப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ரூ. ஆயிரத்துக்கும் குறைவாக ஊதியம்பெறும் அறநிலையத் துறை கோயில் ஊழியா்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.