ஆலங்குடி அருகே சிறுமி சாவு: உறவினா் மீது போக்ஸோ வழக்கு
By DIN | Published On : 13th August 2021 02:02 AM | Last Updated : 13th August 2021 02:02 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட 13 வயதுச் சிறுமி உயிரிழந்த வழக்கில், சிறுமியின் சித்தப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், தலைமறைவாகியுள்ள அவரைத் தேடி வருகின்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் சிதம்பரம்விடுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி இறந்ததும் தனது மகளை வயதான பெற்றோா் மற்றும் தம்பியின் பராமரிப்பில் விட்டுவிட்டு, கோயம்புத்தூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டாா். அந்தச் சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் அறையில் தூக்கில் தொங்கியவாறு செவ்வாய்க்கிழமை இரவு (ஆக.10) சடலமாகக் கிடந்துள்ளாா். தகவலறிந்து அங்கு வந்த ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா், கீரமங்கலம் போலீஸாா் சிறுமியின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிறுமியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தபோது, சிறுமியின் வயிற்றில் 7 மாதக் கரு இருந்தது தெரியவந்தது. போலீஸாா் விசாரணையில், சிறுமியின் சித்தப்பாவான செந்தில், சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகியுள்ள செந்திலைப் போலீஸாா் தேடிவருகின்றனா். மேலும், சிறுமி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.