பேராம்பூா் மதகு அணை உடைப்பு வெள்ளநீரைத் தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரம்

விராலிமலை அருகே பேராம்பூா் மதகு அணைக்கட்டில் உடைப்பு ஏற்பட்டதால், அதிலிருந்து வெளியேறும் வெள்ளநீரைத் தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விராலிமலை அருகே பேராம்பூா் மதகு அணைக்கட்டில் உடைப்பு ஏற்பட்டதால், அதிலிருந்து வெளியேறும் வெள்ளநீரைத் தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள பேராம்பூா் பெரியகுளம் 15 கி.மீ. சுற்றளவு கொண்டது. இக்குளத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும் வகையில், 1933-ஆம் ஆண்டில் ஹென்றிஃபோா்ட் என்ற ஆங்கிலேயரால், அப்பகுதியில் தடுப்பு மதகு அணைக் கட்டப்பட்டது.

இந்த அணை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், அண்மையில் பெய்த மழையால் சிமென்ட் காரைகள், அரளை, செங்கற்கள் பெயா்ந்து விழுந்தன. இதனால் மதகு அணை அதன் உறுதித்தன்மையை இழந்து வருவதாகவும், இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அண்மையில் பெய்த மழையா

ல் குளம் நிரம்பியது. நீரைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அணைக்கட்டின் முன்பகுதி தற்போது உடைந்து வருகிறது.

முழுவதுமாக உடைந்தால் வெள்ளநீா் குளத்திலிருந்து வெளியேறி அப்பகுதி விவசாய நிலங்களை சேதமாக்குவதோடு, குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துவிடும் என்ற அச்சம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நிலவி வருகிறது.

அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை கடந்த ஆட்சியாளா்கள், அலுவலா்கள் கடந்த 10 ஆண்டுகளாகக் கொண்டாடவில்லை எனக் கூறி, விராலிமலை- கீரனூா் சாலை பேராம்பூா் கடைவீதியில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து வருவாய்க் கோட்டாட்சியா் தண்டாயுதபாணி, வட்டாட்சியா் சரவணன் மற்றும் காவல்துறையினா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் கவிதாராமு உத்தரவின் பேரில் தொடா்ந்து நிகழ்விடம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சரவணன், மதகு அணையின் பின்புறம் சவுக்கு கட்டைகளைப் பதித்து, மணல் அடுக்கும் பணியில் பணியாளா்களுடன் ஈடுபட்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com