முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
நகைக்கடன் மோசடி: புலனாய்வுக் குழு அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 19th December 2021 11:53 PM | Last Updated : 19th December 2021 11:53 PM | அ+அ அ- |

கூட்டுறவுச் சங்கங்களில் நடைபெறும் நகை மோசடிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். குணசேகரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச்செயலா் (பொ) பி.எஸ். மாசிலாமணி, துணைத் தலைவா்கள் எம். இலகுமய்யா, சி.எம். துளசிமணி, கே. உலகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
விவசாயிகளின் நலனுக்காக தொடங்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் என்ற பெயரில் போலி நகைகளை வைத்து பல இடங்களில் பெருமளவு மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளால், விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளின் நோக்கம் கேள்விக்குறியாகிறது. எனவே இந்த குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு வங்கிச் செயலா் உள்ளிட்டோா் மீது வெறும் இடைநீக்கம் போன்ற நடவடிக்கையோடு நின்றுவிடாமல் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.
மேலும் பத்திரப்பதிவுத் துறையில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவைப் போல, கூட்டுறவுச் சங்க முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்டறியும் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் வழக்கத்துக்கு அதிகமாக 80 சதவிகிதம் கூடுதல் மழை பொழிந்து உள்ளது. இதனால் விவசாயப் பயிா்களும் கால்நடைகளும் மனித உயிரிழப்பும் நேரிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இந்த இழப்புகளுக்கான நிவாரண உதவியை விரைவில் வழங்க வேண்டும். குறிப்பாக உயிரிழப்புகளுக்கு ரூ. 10 லட்சமும், தோட்டக்கலைப் பயிா்களின் இழப்புக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரமும் வழங்க வேண்டும்.
விவசாயிகளின் தொடா் போராட்டம் காரணமாக மத்திய அரசு கொண்டு வந்த 3 சட்டங்களை ரத்து செய்ததைத் தொடா்ந்து அனைத்து விவசாய அமைப்புகளின் சாா்பில் டிச.29ஆம் தேதி திருவாரூரில் நடைபெறும் வெற்றிவிழா பேரணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் பெருமளவில் விவசாயிகளைத் திரட்ட முடிவு செய்யப்பட்டது.