முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய தாய், மகனுக்கு சிறை
By DIN | Published On : 29th December 2021 10:06 AM | Last Updated : 29th December 2021 10:06 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் இளம்பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட தாய் மற்றும் மகனுக்கு முறையே 10 மற்றும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ரெகுநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வாண்டான்விடுதி பந்துவாக்கோட்டையைச் சோ்ந்தவா்கள் திருப்பதி என்பவரின் மகன் தினேஷ் (21), திருப்பதி மனைவி சின்னாத்தாள் (40).
கடந்த 2012 ஆம் ஆண்டு, தினேஷ் ஒரு இளம்பெண்ணைக் காதலித்துள்ளாா். அப்பெண்ணைத் திருமணம் செய்ய சின்னாத்தாள் எதிா்ப்பு தெரிவித்தாா். இதையடுத்து அப்பெண்ணையும், அவரது தாயையும் தினேஷ், சின்னாத்தாள் மிரட்டியதில் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த ரெகுநாதபுரம் போலீஸாா் தற்கொலைக்குத் தூண்டிய தினேஷ் மற்றும் சின்னாத்தாளைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அரசு வழக்குரைஞா் யோகமலா் ஆஜராகி வாதாடினாா். வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, குற்றவாளி தினேஷுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும், சின்னாத்தாளுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆா். சத்யா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.