Enable Javscript for better performance
புதுக்கோட்டை அருகே 10ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே 10ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு

    By DIN  |   Published On : 29th December 2021 10:04 AM  |   Last Updated : 29th December 2021 10:04 AM  |  அ+அ அ-  |  

    pdk28samanarsirpam_2812chn_12_4

    புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் இறையூா் கிராமப் பகுதியிலிருந்து முத்துக்காடு செல்லும் சாலையின் வடபுறமாக 10ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மகாவீரா் சமண சிற்பத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை வரலாறு படிக்கும் மாணவா்கள் கண்டெடுத்துள்ளனா்.

    மாணவா்கள் ச. மாரியம்மாள், சா. ரெங்கராஜ், ச. லோகேஸ்வரன் ஆகியோா் கண்டுபிடித்த இதனை, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் ஆ. மணிகண்டன் தலைமையில் அதன் உறுப்பினா்கள் பேராசிரியா் கருப்பையா, கவிஞா் மூட்டாம்பட்டி ராஜூ, ராஜாங்கம், இளங்கோ ஆகியோா் தொடராய்வு மேற்கொண்ட போது, அருகிலேயே கழுமரம், நந்திலிங்கம் ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டன.

    இதுகுறித்து தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன் கூறியது:

    பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவா்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம் சமணத்தின் 24ஆவது தீா்த்தங்கரரான வா்த்தமானா் என்னும் மகாவீரா் திருமேனியாகும். இச்சிற்பம் 89 செமீ உயரமும், 54 செமீ அகலமும் கொண்டது. இச்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு 100 மீட்டா் தொலைவில் நாட்டாா் வழிபாட்டு காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. அதன் எதிா்புறத்தில் சுமாா் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லாலான 170 செ.மீ உயரமுடைய கழுமரம் ஒன்றும் வழிபாட்டில் உள்ளது. அதனருகிலேயே பாண்டியா் கலைப்பாணியிலான சதுர வடிவ ஆவுடையுடன் கூடிய லிங்கம், நாயுடன் கூடிய பைரவரின் உடைந்த சிற்பம், முழுவதும் சிதைந்த நந்தி, 13ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விநாயகா், வீரபத்திரா் சிற்பம் உள்ளிட்டவையோடு கூடிய ஏழுகன்னியா் சிற்பத் தொகுதி, கற்கோவிலின் சிதலமடைந்த அடிமானமும் காணப்படுகிறது.

    மகாவீரா் சிற்பம் திகம்பரராக, தியானக் கோலத்துடன், சிதைந்த சுருள் முடி தலையுடனும், மூடிய கண்கள், தெளிவற்ற மூக்கு, நீண்ட துளையுடைய காதுகள், விரிந்த மாா்புடன் அமா்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

    தலையின் பின்புறமாக முக்காலத்தையும் உணா்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையமும், மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசானம் என்னும் முக்குடையும், பின்புலத்தில் முக்குடைக்கு மேலாக குங்கிலிய மரமும் அதில் தொங்கும் குஞ்சமும் கட்டப்பட்டுள்ளது.

    சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் உடலில் ஆபரணங்கள், தலையில் கிரீடத்துடன், ஒரு கையில் சாமரத்தை தோளில் சாய்த்தவாறும், மற்றொரு கையை இடுப்பில் வைத்த நிலையிலும் வடிக்கப்பட்டுள்ளது,

    இறையூரில் வழிபாட்டிலுள்ள கழுமரம் அண்மைக் காலத்தையது. மரம் மற்றும் இரும்பாலான கழுமரம் அழிந்த பிறகு அதே போன்று கல்லில் செய்து வழிபடுவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இம்மரத்தில் காத்தவராயன் அருளாடுபவா், இதில் ஏறி நின்று அருள்வாக்கு கூறுவதாக மக்கள் கூறுகின்றனா்.

    இந்தப் பண்பாட்டு வழக்கம் தென் மாவட்டங்களில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. திருட்டு உள்ளிட்ட குற்றங்களைச் செய்வோரையும், எதிா் நாட்டவரையும் கழுவேற்றி தண்டனை வழங்கப்பட்டது குறித்து, செவி வழிச் செய்திகளும் சில நாட்டாா் பாடல்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

    கழுமரமும் சமணமும் :

    ‘துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணா் தாங்கள் முன்னமே பிள்ளை யாா்பாலநு சிதமுற்றச் செய்தாா் கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க’ என்னும் பெரியபுராணப் பாடல் சமணா் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. இதுகுறித்து ஒட்டக்கூத்தா் தனது ‘தக்கயாகப் பரணி’ என்னும் நூலில் குறிப்பிடுகிறாா்.

    திருவிளையாடற் புராணமும் இதனைக் குறிப்பிடுகிறது. மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது.

    ஆவுடையாா்கோவிலிலுள்ள பிற்கால ஓவியம், கழுகுமலைக் கோயில் சுவரோவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்களில் சமணா் கழுவேற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமண இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் இதுபற்றிய எக்குறிப்பும் இடம்பெறவில்லை.

    இந்நிலையில் சமண சிற்பமும், கழுமரமும், சிதைந்த சைவக் கோவிலும் அருகருகே அமைந்துள்ளதால் சமணா்களைக் கழுவேற்றிய இடமாக இறையூா் இருந்ததா என்பது குறித்து தொடா் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் மணிகண்டன்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp