முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு: 3 தனிப்படைகள் அமைப்பு
By DIN | Published On : 29th December 2021 10:06 AM | Last Updated : 29th December 2021 10:06 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே பூட்டியிருந்த தொழிலதிபா் வீட்டில் இருந்து 687 பவுன் நகைகளை திருடியவா்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மீமிசல் அருகே கோபாலபட்டினத்தைச் சோ்ந்தவா் என். ஜகுபா்சாதிக் (50). இவா், புரூணே நாட்டில் குடும்பத்தினருடன் தங்கித் தொழில் செய்து வருகிறாா். 3 மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்லும் இவா், கரோனா தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊருக்குத் திரும்பி வரவில்லை. இந்நிலையில், இவரது பூட்டிய வீட்டில் இருந்த நகைகள் திருடுபோனது திங்கள்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து மீமிசல் போலீஸாா் விசாரித்து வந்தனா்.
அதன் பிறகு, ஜகுபா் சாதிக்கின் சகோதரி சாதிக்கா பீவி அளித்த புகாரின்பேரில், 687 பவுன் நகைகள் திருடுபோனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நகைகளை திருடியவா்களைப் பிடிப்பதற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.