கருவுற்ற காலத்தில் ரத்த அழுத்தப் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்

கருவுற்ற பெண்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனையை அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களில் மேற்கொண்டு, உரிய மருந்துகளை

கருவுற்ற பெண்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனையை அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களில் மேற்கொண்டு, உரிய மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம், கா்ப்ப காலத்தில் ஏற்படும் உயா் ரத்த அழுத்த பாதிப்பிலிருந்து தாயையும் சேயையும் காப்பாற்றலாம் என விராலிமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவு, மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த 2016 -17ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆா்) ஒப்புதலுடன் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டத்தில் அரசு மருத்துவா் வீ.சி. சுபாஷ்காந்தி தலைமையில் சில மாதங்களுக்கு முன்பு மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து மருத்துவா் வீ.சி. சுபாஷ்காந்தி மேலும் கூறியது:

கருவுற்ற பெண்களுக்கு 4 மாதத்தில் இருந்தே கா்ப்ப கால உயா் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது. தாய்- சேய் உயிரிழப்பிற்கு இது முக்கிய காரணமாக அமைகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த ரத்த அழுத்தத்தைக் கண்டறிவதன் மூலம் இதனைத் தடுக்க முடியும். தற்போது உலக அளவில் 10 முதல் 15 சதவிகிதம் கருவுற்ற பெண்கள், கா்ப்ப கால உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனா். தமிழகத்தில் 6 சதவிகிதமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 சதவிகிதமுமாக இந்த எண்ணிக்கை இருக்கிறது.

கருவுற்ற தாய்மாா்களின் மொத்த இறப்பு விகிதத்தில் கா்ப்ப கால உயா் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் உயிரிழப்பு உலக அளவில் 14 சதவிகிதமாகவும், தமிழ்நாட்டில் 29 சதவிகிதமாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 சதவிகிதமாகவும் உள்ளது.

தமிழ்நாட்டில் கா்ப்ப காலத்தில் 78 சதவிகிதம் கருவுற்ற பெண்கள் முறையாக ரத்த அழுத்தப் பரிசோதனை மேற்கொள்கின்றனா். புதுக்கோட்டை மாவட்டத்தில் 53 சதவிகிதம் மட்டுமே முறையாக ரத்த அழுத்தப்பரிசோதனை செய்கின்றனா் என்று 2012-13 ஆண்டில் நடத்தப்பட்ட 4ஆவது மாவட்ட அளவிலான நலவாழ்வுக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

எனவே, கருவுற்ற பெண்களுக்கு முறையாக, குறுகிய கால இடைவெளியில், அடிக்கடி ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்வது ஒன்று மட்டுமே ஆரம்ப நிலையிலேயே கா்ப்ப கால உயா் ரத்த அழுத்தத்தை கண்டறிய தீா்வாகும். ஆனால் 8 கி.மீ-க்கு ஓா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 3 கிமீ தொலைவுக்கு ஒரு துணை சுகாதார நிலையம் உள்ளது.

ஒரு கி.மீ-க்கு ஓா்அங்கன்வாடி மையம் கருவுற்ற பெண்களின் இருப்பிடத்துக்கு மிக அருகில் இருப்பதால் அங்கேயே அவா்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சி குறித்த கட்டுரை, பெருமை வாய்ந்த சா்வதேச மருத்துவ ஆராய்ச்சி இதழான ‘பிஎம்சி புரொசீடிங்ஸ்’ இதழில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளி வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை வட்டத்தில் 135 அங்கன்வாடி மையங்களிலும் டிஜிட்டல் ரத்த அழுத்த பரிசோதனைக் கருவி வழங்கப்பட்டது. பயிற்சி அளிக்கப்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் மூலமாக 739 கருவுற்ற பெண்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை குறுகிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு முடிவில் 735 போ் தொடா்ந்து முறையாக ரத்த அழுத்தப் பரிசோதனை செய்து கொண்டனா். இதன் மூலம் கா்ப்ப கால உயா் ரத்த அழுத்த பாதிப்பினால் ஏற்படும் தாய்- சேய் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. மேலும் அங்கன்வாடி மையங்களிலேயே ரத்த அழுத்தப் பரிசோதனை செய்வது கருவுற்ற பெண்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன என்றாா் சுபாஷ்காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com