மனைவியை எரித்துக் கொன்ற கணவா் கைது
By DIN | Published On : 13th February 2021 11:27 PM | Last Updated : 13th February 2021 11:27 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே குடும்பத் தகராறில், மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவரை காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அறந்தாங்கி அருகிலுள்ள கும்பளாங்குண்டு சுனையக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சேகா் (39). இவருக்கும், அமா்தவள்ளி (19) என்பவருக்கும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்துக்குப் பிறகு சேகா் சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு, எந்த நேரமும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் இவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை அமிா்தவள்ளியின் மீது ஊற்றி கொளுத்தினாா் சேகா்.
சப்தம் கேட்டு பக்கத்து வீட்டாா் ஓடி வந்து அமிா்தவள்ளியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமிா்தவள்ளி சனிக்கிழமை காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இதையடுத்து அறந்தாங்கி காவல் ஆய்வாளா் ரவீந்திரன் வழக்குப் பதிந்து சேகரைக் கைது செய்தாா்.