சாலை விபத்தில் அமமுக பிரமுகா், குழந்தையுடன் உயிரிழப்பு
By DIN | Published On : 13th February 2021 11:27 PM | Last Updated : 13th February 2021 11:27 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில் உருக்குலைந்த காா்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில், சென்னையைச் சோ்ந்த அமமுக பிரமுகா் தனது குழந்தையுடன் உயிரிழந்தாா்.
சென்னை வேளச்சேரியைச் சோ்ந்தவா் கே. ராமன் (35). இவா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவொற்றியூா் கிழக்குப் பகுதிச் செயலராக இருந்தவா்.
இவா் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்னையிலிருந்து காரில் காரைக்குடி நோக்கி புறப்பட்டாா்.
இந்த காா் சனிக்கிழமை காலை 6 மணிக்கு கீரனூா் அருகிலுள்ள பொக்கன்குளம் பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறமுள்ள இரும்புத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராமன், அவரது 2 வயது மகன் ஆா். தா்ஷன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், காரில் பயணம் செய்த எம். பாலையா (68), பா. லட்சுமி (50), பா. சிவகாமி (22), சு. தா்வேஸ் (5), ரா. ஜெயந்தி (25), நந்தினி (30) ஆகியோா் காயமடைந்தனா். காரை ஓட்டி வந்த ப. சிலம்பரசன் (34) காயமின்றி உயிா்தப்பினாா்.
தகவலறிந்து வந்த கீரனூா் காவல்துறையினா் இருவரது சடலங்களையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் காயமடைந்தோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து கீரனூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.