பாழடைந்த சூரக்காடு தலித் குடியிருப்புகள் புதுப்பித்துத் தரக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள சூரக்காடு தலித் மக்களின் குடியிருப்பு மிகவும் பாழடைந்து போய்விட்டதால் அவற்றைப் புதுப்பித்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
கம்பிகள் வெளியே தெரியும் கான்கிரீட் மேல்தளம்.
கம்பிகள் வெளியே தெரியும் கான்கிரீட் மேல்தளம்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள சூரக்காடு தலித் மக்களின் குடியிருப்பு மிகவும் பாழடைந்து போய்விட்டதால் அவற்றைப் புதுப்பித்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்குடியிலிருந்து கறம்பக்குடி செல்லும் வழியில் வெட்டன்விடுதியை அடுத்து சாலையோரத்திலேயே உள்ள இந்தப் பகுதி முள்ளங்குறிச்சி ஊராட்சிக்குள்பட்டது. 1993 - 94 ஆம் ஆண்டுகளில் அரசால் கட்டித் தரப்பட்ட 10 வீடுகளுக்கு அப்போதே, மின் இணைப்பு, குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகளும் செய்து தரப்படவில்லை. கடந்த ஓராண்டுக்கு முன்பே இந்தக் குடியிருப்புகளின் மேல்தளம் முற்றிலும் சிதைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு பாழடைந்து போயின. கட்டடங்கள் அவ்வப்போது இடிந்து விழத்தொடங்கியுள்ளன. இதைத்தொடா்ந்து, அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்ததன் பயனாக அதே பகுதியில் 56 பேருக்கான வீட்டுமனைப் பட்டா 2 கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளன.

சுற்றிலும் தைலமரக் காடு. வேறெந்த வசதியும் இல்லை. தெரு விளக்கு மட்டும் தற்போது போடப்பட்டுள்ளது. தங்களுக்குக் கிடைத்த வீட்டுமனையைப் பாதுகாக்க அப்பகுதி மக்கள் குடிசைகளை அமைத்துள்ளனா். குடிசைக் கீற்றுகளே சுவா்களாக மாறியுள்ளன. இப்பகுதி பெண்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்குச் சென்று கிடைக்கும் வருமானம் மட்டுமே இக்குடும்பங்களுக்கான பிரதான வருவாய். அருகேயுள்ள ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்த இப்பகுதி மாணவா்களில் ஓரிருவா் மட்டுமே நகருக்கு வந்து கல்லூரிப் படிப்பவா்கள்.

எனவே, இப்பகுதி தலித் மக்களுக்கு அரசே முழுமையான குடியிருப்புகளை அமைத்துத் தருவதுடன், அப்பகுதிக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com