தமிழக முதல்வா் இன்று புதுக்கோட்டை, கரூா் வருகை

புதுக்கோட்டை, கரூா் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வருகிறாா்.
புதுக்கோட்டையில் நடைபெறும் விழா முன்னேற்பாட்டுப் பணிகளை சனிக்கிழமை பாா்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.
புதுக்கோட்டையில் நடைபெறும் விழா முன்னேற்பாட்டுப் பணிகளை சனிக்கிழமை பாா்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டை/ கரூா்: புதுக்கோட்டை, கரூா் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வருகிறாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூரில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தமிழக முதல்வா் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டுகிறாா். இதையொட்டி, விழா முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் எச்.எம். ஜெயராம் சனிக்கிழமை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் வந்து பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். மேலும், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் வேட்டைசெல்வம் உள்ளிட்டோரும் பணிகளைப் பாா்வையிட்டனா்.

விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோா் அங்கிருந்து காா் மூலம் புதுக்கோட்டை வந்தடைகின்றனா். காலை 10.30 மணிக்கு விழா தொடங்குகிறது. விழாவுக்கு, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தலைமை வகிக்கிறாா். முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டி பேசுகிறாா். அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வரவேற்றுப் பேசுகிறாா்.

அரசின் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன், பொதுப்பணித் துறைச் செயலா் க. மணிவாசகன், மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா்.

விழா நடைபெறும் பகுதிகளில், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் தலைமையிலான பணியாளா்கள் அடிப்படை வசதிகள், கிருமி நாசினி தெளிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

கரூா் வருகை: புதுக்கோட்டையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு கரூா் வருகை தரும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு லைட் ஹவுஸ் காா்னரில் மாவட்ட அதிமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு அங்கு நிறுவப்பட்டிருக்கும் 100 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகளை திறந்து வைக்கிறாா்.

பின்னா், பேருந்துநிலைய பகுதியில் தோ்தல் பிரசாரம் செய்கிறாா். அதன்பின்னா் தண்ணீா்பந்தல்பாளையத்தில் கரூா் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறாா். இதையடுத்து, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்ததற்கும், பயிா்க்கடனை ரத்து செய்தது, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

விழாவுக்கு, புகளூா் வாய்க்கால் மற்றும் பாப்புலா் முதலியாா் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் நடராஜன் தலைமை வகிக்கிறாா். வாங்கல் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் முத்துக்குமாரசாமி வரவேற்கிறாா். இதில், அமைச்சா்கள் பி.தங்கமணி, எம்.ஆா்.விஜயபாஸ்கா், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதா மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com